×

2 நாள் 23 மணி நேரம்: நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் நடைபெற்ற ஐ.டி. சோதனை நிறைவு...சம்பளம், சோத்துகள், முதலீடுகள் குறித்து ஆய்வு செய்ததாக தகவல்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், பிகில், தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து   வெளியிட்டுள்ளது. மேலும் ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமாக திரையரங்குகளும் உள்ளன. இந்நிலையில், விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ்   நிறுவனம் அந்த படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் அந்தப் படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

ஒருபக்கம் பிகில் படம் பெரிய அளவில் லாபம் கொடுத்தது என்று கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் போட்ட முதலீடு கூட   தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே, வரி ஏய்ப்பு புகாரில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும்   தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர்   சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தி.நகரிலுள்ள கல்பாத்தி அகோரத்தின் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, பிகில்’ படத்திற்குச் செலவழித்த கணக்கு விவரங்களை  வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில், பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளத்தொகை குறிப்பிடப்பட்டு இருந்ததாகக்  கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நடிகர்  விஜய்யிடம் விளக்கம் பெற வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாகவும், இதற்காகத்தான்  நெய்வேலியில் ‘மாஸ்டர்’ திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. மேலும், நடிகர் விஜய்யை மேல்  விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். தனது சொந்த ஜாக்குவார் காரில் ஏற முற்பட்ட விஜய்யை தடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களது  இன்னோவா காரில் ஏற்றி சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில் அவரை அழைத்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று இரவு தொடங்கி இன்று இரவு  8.45 மணி வரை சுமார் 23 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வந்தனர். சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்  வீட்டுகளில் 4 பேர் கொண்ட குழு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய், மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை  அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று கொண்டு சோதனையை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படத்திற்கு வாங்கப்பட்ட சம்பளம்,  சோத்துகள் விவரங்கள், முதலீடுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Vijay Panayoor ,IT Hall of Fame , 2 Day 23 Hours: Actor Vijay Panayoor at the IT Hall of Fame. Completed the test ... Information on salaries, checks and investments
× RELATED பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம்...